Steve Jobs இன் ஆக்கபூர்வமான சிந்தனைக்குக் காரணமான 3 முக்கிய பழக்கங்கள். – Sudar FM

Steve Jobs இன் ஆக்கபூர்வமான சிந்தனைக்குக் காரணமான 3 முக்கிய பழக்கங்கள்.

இந்த செய்தியைப் பகிர்க

இன்று நீங்கள் இந்தப் பதிவை வாசித்துக் கொண்டிருப்பதற்கு என்றோ ஒருநாள் Steve Jobs இன் மனதில் உதித்த திட்டங்களே காரணம் என்றால் அதை உங்களால் நம்பமுடிகின்றதா?

இன்றைய கணனி உலகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய நிறுவனங்களில் Apple முதன்மையானது. Apple நிறுவனத்தை ஆரம்பித்தவர்களுள் Steve Jobs மிக முக்கியமானவர். Steve Jobs இன் வீட்டின் garage இல் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இன்று உலகின் முதன்மை நிறுவனமாக மாறியுள்ளமைக்கு Steve Jobs வகுத்த திட்டங்களே முதல் காரணம். Apple இன் உற்பத்திப் பொருட்களிற்கு இன்று இருக்கும் தனித்துவ அடையாளம் அன்று Steve Jobs இனால் உருவாக்கப்பட்டதே.

Steve Jobs இற்கு எவ்வாறு இது சாத்தியமானது? எவ்வாறு Steve Jobs இனால் இவ்வாறு ஆக்கபூர்வமாக சிந்திக்க முடிந்தது? – இதற்கு விடையாக அவரின் 3 பழக்கங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன . அவை என்ன என்ன பழக்கங்கள் என்பதை நாம் இங்கு பார்க்கலாம்.

1. நடக்கும்போது சிந்தனை செய்வது.

நமது உடலிற்கும் மூளைக்கும் இடையிலிருக்கும் பிணைப்பு மிக நெருக்கமானது. இதனால் உடற்பயிற்சி நமது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன் அதன் செயற்திறனையும் அதிகரிக்கின்றது. பல வெற்றியாளர்கள் உடற்பயிற்சி அல்லது யோகாவை தங்கள் நாளாந்த பழக்கமாகக் கடைப்பிடிக்கின்றார்கள்.

Steve Jobs நிதானமான நடையை தனக்காக வைத்திருந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் Apple நிறுவனத்தை சுற்றி நடக்க ஆரம்பித்துவிடுவார். தனது சிறு சிறு வேலைகளை நடந்துசென்றே செய்வார். இவ்வாறு நடந்துகொண்டிருக்கும்போதே தனது சிந்தனையைத் தட்டிவிடுவார். பிரச்சனைகளை அலசி அதற்கான தீர்வினைத் தேடுவார்.

Stanford பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி நடக்கும்போது ஒருவரின் சிந்தனைத் திறன் 60% அதிகரிக்கின்றது. எனவே அடுத்ததடவை நீங்கள் ஏதாவது பெரிய முடிவினை எடுக்க நேரும்போது ஒரு 10 – 15 நிமிடம் வெளியில் ஒரு அமைதியான இடத்தில் நடந்துகொண்டே சிந்தித்துப்பாருங்கள்.

2. தியானம்.

தியானம் – பார்ப்பதற்கு இலகுவாகத் தோன்றினாலும் உண்மையில் இதனை தொடர்ந்து கடைப்பிடிப்பது கடினமான செயலே. ஆனால் அவ்வாறு கடைப்பிடிக்கும்போது கைமேல் பலன்கிட்டும்.

தான் படித்துக்கொண்டிருந்த காலத்திலிருந்தே Steve Jobs தியானத்தில் அதீத ஆர்வம் கொண்டிருந்தார். இந்தியாவிற்கு வந்து தங்கி ஆன்மீகத்தைத் தேடினார். ஒருபடி மேலே போய் துறவியாகவேண்டும் என்றுகூட எண்ணினார்.

இவரின் இந்தப் பழக்கம் Apple நிறுவனத்தை ஆரம்பித்தபோதும் இருந்தது. தியானம் Steve Jobs ற்கு மிகவும் ஆக்கபூர்வமான சிந்தனையைக் கொடுத்தது. மேலும் வலுவான கற்பனை சக்தியைக் கொடுத்தது. இந்த கற்பனை சக்தியே பல்வேறுபட்ட புதுமைகளை Apple உற்பத்திப் பொருட்களில்கொண்டுவர உதவியது.

நீங்கள் சிறிதுநேரம் உட்க்கார்ந்து அவதானித்தீர்களாக இருந்தால், உங்கள் மனம் எவ்வளவிற்கு அமைதியில்லாமல் அலை பாய்ந்துகொண்டிருக்கின்றது என்பது தெரியும். அதை அமைதிப்படுத்தி கட்டிற்குள் கொண்டுவருவது மிகக்கடினமான ஒன்றே, ஆனால் அவ்வாறு செய்யும்போது பல்வேறுபட்ட ஆக்கபூர்வமான சிந்தனைகள் உங்கள் மனதில் தோன்றும்.

3. பல்வேறு துறைகளைக் கற்றல்.

இது உண்மையில் வெற்றிக்கான வழியா என்பது ஒரு காலத்தில் Steve Jobs ற்கே தெரியாமல் இருந்தது. கல்லூரி காலகட்டத்தில் Steve Jobs தனக்கு விருப்பமான அனைத்து துறைகளையும் படித்தார். அதன்மூலம் தான் பயனடைவேனா இல்லையா என்பதுகூட அவரிற்குத் தெரியவில்லை. Engineering படிக்கச் சென்றவர் அதைப் பாதியில் விட்டுவிட்டு சித்திரக்கலையை கற்றார். எழுத்துக்கள் வடிவமைப்பைக் கற்றார். இவை ஒன்றிற்கொன்று எந்தவிதத்திலும் தொடர்புடையவை அல்ல.

இருப்பினும் Stanford பல்கலைக்கழகத்தின் உரையில் எழுத்துக்களை வடிவமைக்க தான் கற்றுக்கொண்டது Apple நிறுவனத்தின் Macintosh கணனிகளுக்கான எழுத்துக்கள் மற்றும் User Interface களை வடிவமைக்க பெரிதும் உதவியதாக கூறினார்.

இந்தப் பழக்கம் உண்மையில் எதனை எடுத்துரைக்கின்றது எனில், உங்களிற்கென்று எல்லைகளை வகுக்காதீர்கள், உங்கள் உள்ளுணர்வுகளை பின்பற்றி எல்லைகளைத் தாண்டிச் செல்லுங்கள்.அப்போதுதான் பல்வேறு புதுமைகளை நீங்கள் கண்டறிய முடியும். நீங்கள் இருக்கும் துறை தவிர்ந்த வேறு துறைகளைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து வைத்திருங்கள். அவை உங்களிற்கு தற்போது பயனுள்ளதோ இல்லையோ, அவற்றைக் கற்பதில் ஆர்வமிருந்தால் கற்றுக்கொள்ளுங்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Sudar

Leave a Reply